search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் சிறை காவலர்"

    வேலூர் ஜெயிலில் பணியாற்றி வந்த பெண் காவலாளி செல்போன் விவகாரத்தில் சிக்கியிருப்பதை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கும் உதவினாரா? என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சென்னை புழல் ஜெயிலில் கைதிகள் கு‌ஷன் படுக்கை வசதியுடன் டி.வி., ரேடியோ, செல்போன்கள் என சுக போகமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புழல் ஜெயிலை தொடர்ந்து வேலூர் மத்திய ஜெயிலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வழக்கமாக ஆண்கள் ஜெயிலில் தான் கைதிகளிடம் செல்போன், கஞ்சா சிகரெட் பாக்கெட்டுகள் சிக்கும். சமீப காலமாக பெண்கள் ஜெயிலில் செல்போன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளன.

    இங்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி உள்பட முக்கிய தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலுக்குள் காவலர்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    2ம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் திலகவதி (55). இவர், கடந்த சில மாதங்களாக கேன்டீன் பொறுப்பை கவனித்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி காலை பணிக்கு வந்த திலகா, காய்கறிகளை வாங்கி கொண்டு கேன்டீனுக்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் இருந்து மின்சாதன பொருளின் வைபரட் சத்தம் கேட்டது.

    2-வது நுழைவு கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயில் ஊழியர் விஜயா, திலகாவை சோதனையிட்டார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் செல்போன் ஒன்று இருந்தது. செல்போன் வைபரட் மோடில் வைத்துள்ளார். அழைப்பு வந்ததால் திலகா சிக்கி கொண்டார்.

    இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் திலகா மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து திலகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு போன் கொடுத்து உதவியது அம்பலமாகியுள்ளது.

    கடந்த 2010ம் ஆண்டு ஜெயிலில் செல்போன் வைத்திருந்ததாக ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது சிக்கிய பெண் காவலர், எந்தெந்த கைதிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வந்தார்.

    அவர்கள் வெளியில் யார் யாரிடம்... என்னென்ன பேசினார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் களமிறங்கியுள்ளனர். மேலும் நளினிக்கும் செல்போன் கொடுத்து திலகா உதவினாரா? எனவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திலகவதியின் போனில் இருந்த சிம்கார்டில் உள்ள எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, சிறைத்துறை விதியை மீறி செல்போன் எடுத்து சென்ற குற்றத்திற்காக காவலர் திலகாவை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் புழல் ஜெயிலை போல் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலிலும் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என அதிரடியாக ஆய்வு நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
    ×